Friday, 3 October 2014

நெட் தேர்வில் தேர்ச்சி பெற டிப்ஸ்...

நெட் தேர்வில் தேர்ச்சி பெற டிப்ஸ்...

 

 பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் நெட் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான சில எளிய வழிமுறைகள்.

* நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் ஆசிரியராவதற்கான தகுதி பெற முடியும். அத்துடன், ஆராய்ச்சிப் படிப்புகளில் சேர்ந்து படிக்க உதவித் தொகையும் பெற முடியும்.

* நெட் தேர்வில் முதுநிலைப் படிப்புகளில் உள்ள ஒவ்வொரு பாடப்பிரிவுகளிலிருந்தும் வினாக்கள் கேட்கப்படுகின்றன. ஆகையால், நீங்கள் உங்களது முதுநிலைப் படிப்பிற்கான புத்தகங்களை தேசிய தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படையில் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் முதுநிலை படிப்பைப் படிக்கும்போது வகுப்பறையில் குறிப்புகளை எழுதி வைத்த நோட்டுகளையும் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய நெட்தேர்வுக்கான பாடத்திட்டத்தை முழுமையாகக் கொண்டிருக்கும் புத்தகங்களை வாங்க வேண்டும். ஆயிரம் ரூபாய் செலவு செய்தால் போதும், தேர்வுக்குப் போதுமான நல்ல புத்தகங்களை வாங்கி விடலாம்.

* தற்போது, கடந்த பத்து ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்வித்தாள்கள் யு.ஜி.சி. இணையதளத்தில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக இத்தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகளும் வழங்கப்படுகின்றன. இவற்றை டவுன்லோடு செய்து, பிரிண்ட் அவுட் எடுத்து பயிற்சி பெறலாம்.

* தேர்வு பாடத்திட்டத்திற்கு தகுந்த முறையில் சேகரித்த பாடப்புத்தகங்களையும், குறிப்புகளையும் நன்கு ஆழமான முறையில் தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணத்திற்கு யாரால் கண்டறியப்பட்டது, எந்த ஆண்டு கண்டறியப்பட்டது போன்ற விவரங்கள் என அனைத்தையும் ஆழமாகப் படித்து, குறிப்பேட்டில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதுபோல் ஒவ்வொரு யூனிட்டிற்கும் தயார் செய்துகொள்ள வேண்டும்.

* ஒரே பாடத்தில் தேர்வுக்கு தயாராகுபவர்கள், குழுவாகச் சேர்ந்து பயிற்சி மேற்கொள்ளும்போது எளிதில் விஷயங்கள் மனதில் பதியும். இதன் மூலம் பல விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் போது காலம் மிச்சமாகும். மேலும், ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களின் ஆலோசனைகளையும் அவர்களிடம் உள்ள குறிப்புகளையும் பெற்றுக்கொள்வது நல்லது.

* முன்னணி பாடப் புத்தகங்களை வெளியிடும் நிறுவனங்கள் நெட் தேர்வு மாதிரி வினா விடை புத்தகங்களை வெளியிடுகின்றன. இவற்றில் தரமானதைத் தேர்ந்தெடுத்து வாங்கி, அதில் வெளியிட்டு உள்ள கேள்விகளுக்கு சரியான பதில்களை எழுதிப் பார்த்துப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பயிற்சி செய்யும் போது பலரும் ஒவ்வொரு கேள்விக்கும் வழங்கப்பட்டிருக்கும் நான்கு விடைகளில் எது சரியானது என்பதைத் தான் பார்ப்பார்கள். அப்படிப் பார்த்தால் தேர்வின்போது தடுமாற வேண்டி இருக்கும். இதற்கு மாற்றாக ஒவ்வொரு கேள்விக்கும் சரியான விடை எது என்பதை படித்து பார்த்து முடிவெடுக்க வேண்டும். இதுபோல் பயிற்சி செய்யும்போது தேர்வில் விடைகளின் வரிசையினை மாற்றிக்கொடுத்து இருந்தால் எளிதாக தடுமாறாமல் விடையளிக்க முடியும்.

* ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட கேள்வித்தாள்களைக் கொண்டு மாதிரித் தேர்வு எழுதிப் பார்க்க வேண்டும். அதன் பின்பு அதற்கான விடைகளோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும். பழைய கேள்வித்தாள்களில் இருந்து 10 முதல் 15 சதவித வினாக்கள் புதிய தேர்வுகளில் இடம் பிடிக்கின்றன. இந்தப் பயிற்சி உங்களின் மதிப்பெண்ணைக் கூட்டும். அத்துடன், உங்களது நேர மேலாண்மைக்கு உதவும். அத்துடன், தொடர் பயிற்சி மேற்கொள்ளும்போது உங்களுக்குள் தன்னம்பிக்கை வளரும். தேர்வில் வெற்றி பெறுவதற்கான நம்பிக்கை கூடும்.

* யூஜிசி நெட் தேர்வானது மூன்று தாள்களைக் கொண்டது. முதல் தாள் தேர்வு அனைவருக்கும் பொதுவானது. இந்தத் தாளில் Research aptitude, Teaching aptitude போன்ற பிரிவுகளில் இருந்து கேள்விகளைக் கேட்கிறார்கள். வகுப்பறையில் ஆசிரியர் எப்படி மாணவர்களைக் கையாள வேண்டும் என்ற வகையிலும் நிறைய கேள்விகள் இருக்கும்.

அத்துடன், இந்தியாவில் உயர் கல்வி குறித்த விஷயங்கள், பல்கலைக்கழக மானியக்குழு குறித்த விஷயங்களும் கேட்கப்படுகின்றன. முதல் தாளில் சுற்றுச்சூழல் கல்வி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கேள்விகளும் இடம் பெறுகின்றன. இந்தப் பிரிவுகள் குறித்து அடிப்படை அறிவினை வளர்த்துக் கொள்வது அவசியம். முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களைத்தான் இரண்டாவது மற்றும் மூன்றாவது தாளில் எவ்வளவு மதிப்பெண் பெற்று இருக்கிறார்கள் என்று பார்த்து முடிவை வெளியிடுகிறார்கள்.

* இரண்டாவது மற்றும் மூன்றாவது தாளில் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியே கேள்விகளை வடிவமைத்து இருப்பார்கள். மூன்றாவது தாளில் ஐந்தில் இருந்து பத்து கேள்விகள் தர்க்க வாதம் சார்ந்தவையாக இருக்கும். இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்க ஆங்கில அறிவு அவசியம். பழைய கேள்வித்தாள்களில் தர்க்க வாதக் கேள்விகளை எப்படிக் கேட்டு இருக்கிறார்கள், அதற்கான விடைகள் எவை என்பதை பார்த்துத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இதுபோல் வெவ்வேறு கேள்வித்தாள்களில் இருந்து தர்க்க வாத கேள்விகளுக்குப் பதிலளிக்கும் முறையினை பயிற்சி எடுத்துக்கொண்டால் இப்பகுதியில் உள்ள கேள்விகளுக்கு சரியான விடையளித்து விட முடியும்.

இத்தேர்வு எழுதுபவர்களுக்கு நேர மேலாண்மை முக்கியம். தேர்வு நடைபெறும் இடத்துக்கு உரிய நேரத்தில் செல்லுங்கள். தேர்வில் கொடுக்கப்பட்டுள்ள நேரத்திற்குள் அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்கப் பாருங்கள். தேர்வுக்கு முன்னதாக நல்ல பயிற்சி தேவை. இத்தேர்வுக்காக நேரம் ஒதுக்கி நன்கு படியுங்கள். தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள். வெற்றி நிச்சயம்.

No comments:

Post a Comment