Wednesday, 15 October 2014

சைக்கோமெட்ரிக் தேர்வுகள்: நீங்கள் விசுவாசமானவரா?

சைக்கோமெட்ரிக் தேர்வுகள்: நீங்கள் விசுவாசமானவரா?

 

 

நீங்கள் உங்கள் நிறுவனத்துக்கு நாணயமாக நடந்து கொள்வீர்களா? இப்படி ஒரு கேள்விக்கு நிச்சயம், ஓரளவு, மாட்டேன் என்று மூன்றுவிதப் பதில்களைக் கொடுத்தால், எல்லோருமே ‘நிச்சயமாக’ என்ற பதிலைத்தான் தேர்ந்தெடுப்பார்கள் (நடைமுறையில் ‘ஓரளவு’ என்று நடந்துகொள்ளக் கூடியவர்கள் உட்பட).
எனவே இதுபோன்ற (போலியான பதில் வர வாய்ப்புள்ள) கேள்விகளைக் கேட்டு நபர்களைத் தேர்வு செய்வதை நிறுவனங்கள் விரும்பாது. ஆனால் கேள்வியைக் கொஞ்சம் சுற்றி வளைத்துக் கேட்டால் மாட்டிக் கொள்ள வாய்ப்பு உண்டு. 

சுற்றி வளைக்கும் கேள்வி
 
“உங்களுக்கு வேறொரு நிறுவனத்திலிருந்து வேலையில் சேர அழைப்பு வருகிறது. நீங்கள் எங்கள் நிறுவனத்தை விட்டுச் சென்று விடுவீர்களா?’’.
இந்தக் கேள்விக்கு உங்கள் பதில் என்னவாக இருக்கும்? ‘உண்மையில் அப்படி ஒரு நிலை வந்தால் பார்த்துக் கொள்ளலாம். மற்றபடி இந்த நிறுவனம் தன்னிடம் லாயல்டி கொண்டவர்களைத்தான் எதிர்பார்க்கும்’ என்று நினைத்து ‘நிறுவனத்தைவிட்டுச் செல்ல மாட்டேன்’ என்று நீங்கள் பதிலளிக்கக் கூடும்.
இப்போது வேறொரு விவரம் இதே கேள்வியுடன் சேர்க்கப்படுகிறது. ‘வேறொரு நிறுவனத்தில் உங்களுக்குக் கொஞ்சம் அதிகம் ஊதியத்துடன் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. நீங்கள் இந்த வேலையை விட்டுச் செல்வதில் எங்களுக்கு மறுப்பு இல்லை என்று தெரிவிக்கிறோம். அப்போது இந்த வேலையை விட்டுச் செல்வீர்களா?’’. 

இந்தக் கேள்விக்கு விடையளிக்கக் கொஞ்சம் தயக்கமாக இருக்கிறதல்லவா? ‘சரி இவர்களே மறுப்பு தெரிவிக்காதபோது வேலையை விடுவதை இவர்கள் தப்பாகவா நினைத்துக் கொள்ளப் போகிறார்கள்?’ என்று எண்ணி அதற்கேற்றவாறு பதிலை டிக் செய்வீர்களா? 

பாதிப் ப்ராஜெக்டில்
 
இதோ வந்து விழுகிறது அடுத்த கேள்வி. ‘அதே சூழல். அதே வேறொரு வேலைவாய்ப்பு. அதேபோல் எங்களுக்கு மறுப்பு இல்லை. ஆனால் அந்த வேறொரு வேலைவாய்ப்பு வரும்போது எங்கள் நிறுவனத்தின் ப்ராஜெக்டில் பாதியைத்தான் முடித்திருக்கிறீர்கள். மீதியை இன்னொருவருக்குச் சரியான விதத்தில் புரிய வைப்பது சிரமம். என்ன முடிவெடுப்பீர்கள்?’.
இப்போது பிடி இறுகுகிறது அல்லவா?
தவிர உணர்வுகளை உசுப்பினால் உங்கள் உண்மையான குணம் எப்படியும் சீறிக்கொண்டு வெளியே வந்துவிடும்.
கேள்வி இப்படி வடிவமைக்கப்படலாம். ‘பாதிப் ப்ராஜெக்டில் இருக்கிறீர்கள். தொடர்ந்து வேலை செய்தால்தான் முடிக்க முடியும். அப்போது உங்கள் நெருங்கிய நண்பரிடமிருந்து அழைப்பு வருகிறது. ‘படுத்த படுக்கையாக இருக்கும் என் அப்பாவை ஐந்து நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு பார்த்துக் கொள்ள முடியுமா? நான் அவசரமாக வேறு ஊருக்குச் செல்ல வேண்டிய கட்டாயம்’.
இதற்கு என்ன பதில் அளிப்பீர்கள்? இப்போதும் நிறுவனத்தின் சார்பில் நடந்து கொள்வதாகப் பதிலளித்தால்தான் நீங்கள் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள் என்று உள்ளுக்குள்ளிருந்து ஒரு குரல் கேட்கலாம். 

உணர்ச்சிகரமான கேள்விகள்
 
இப்போது அடுத்த வலை அடுத்த கேள்வியில் வீசப்படும். ‘அந்த நண்பர் இதே போன்ற சூழலில் உங்களுக்கு உதவியவர்’ என்கிறது கூடுதல் தகவல். இப்போது உங்கள் முடிவு (அதாவது நீங்கள் தேர்ந்தெடுக்கும் பதில்) என்னவாக இருக்கும்?
உங்களை உணர்ச்சிக்குழியில் தள்ளி உங்களின் உண்மையான குணநலனை வெளிக் கொண்டுவர ‘நட்பு’ எனும் ஆயுதத்தைச் சைகோ மெட்ரிக் தேர்வுகளில் பயன்படுத்தக் கூடும். இதோ அப்படிப்பட்ட சில கேள்விகளும், அவற்றுக்கான விதவிதமான பதில்களும். 

# உங்கள் அறியாமைகளை உங்கள் தோழர்களிடம் வெளிக்காட்டுவதுண்டா

அ. சமாளித்து மறைத்துவிடுவேன். அறியாமையைப் பறைசாற்றுவது
வெட்கக்கேடான விஷயமாயிற்றே.
ஆ. சிலவற்றை மட்டும் வெளிக்காட்டுவேன்
இ. இதில் மறைக்க என்ன இருக்கிறது? சிநேகிதன்தானே! 

# தோழர்களுடனான (நேரிலோ, தொலைபேசியிலோ) சந்திப்புகள் எந்த மட்டில்?
 
அ. அடிக்கடி. சொல்லப்போனால் சந்திக்கவில்லை என்ற உணர்வே
தோன்றாத அளவுக்கு.
ஆ. அலுவலக வேலை காரணமாக நேரமின்மையால் நினைப்பதைவிட குறைவாகத்தான் சந்திக்க முடிகிறது.
இ. நண்பன் அடிக்கடி குறைப்பட்டுக் கொள்கிறான், நான் அவனைச் சந்திக்க முயற்சியே எடுப்பதில்லை என்று, என்ன செய்ய? 

# வழக்கத்துக்கு மாறாக உங்கள் நண்பர் வருத்தத்ததுடன் தோற்றமளிக்கிறார். என்ன செய்வீர்கள்?
 
அ. உடனடியாக வருத்தத்தின் காரணம் என்னவென்று கேட்டுவிடுவேன்.
ஆ. மவுனமாக இருப்பேன். அவனே தனக்குத் தோன்றும் போது தன் அந்தரங்கத்தை வெளியிடட்டும்.
இ. அவனாக எதையாவது கூறத் தொடங்கினால்கூட, ‘யோசித்துச் சொல்லு, அப்புறம் இந்த விஷயத்தை ஏன்தான் பகிர்ந்து கிட்டோமோ?ன்னு வருத்தப்படக் கூடாது’என்று எச்சரிப்பேன். 

சிக்காத மீனாக
 
இந்தக் கேள்விகளுக்கு எந்தப் பதிலை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பது உங்கள் குண நலன்களை வெளிப்படுத்தும். வெளிப்படைத் தன்மை, வேலை மற்றும் தனி வாழ்வு ஆகியவற்றில் நீங்கள் காட்டும் ஈடுபாடு, பிரச்னையைக் கையாளும் முறை போன்றவற்றில் உங்கள் கோணம் என்ன என்பது உங்கள் பதிலில் வெளிப்பட்டுவிடும். அது எப்படி என்பதை உங்களாலேயே (பதில்களை ஒருமுறைக்கு இருமுறை படித்துப் பார்த்தால்) விளங்கிக் கொள்ள முடியும். அதன்பின் சைக்கோமெட்ரிக் தேர்வு எனும் வலையில் சிக்கிக் கொள்ளாத மீனாக நீங்கள் அதைத் தாண்டி வெற்றியின் அடுத்த கட்டத்துக்குச் செல்லலாம்.

 

Friday, 3 October 2014

ரீசனிங் வினாக்கள்: தேவை அடிப்படை புரிதல்

ரீசனிங் வினாக்கள்: தேவை அடிப்படை புரிதல் 

 

வங்கித் தேர்வுகளுக்கான தேர்வுகளில் ரீசனிங் பகுதியில் கேட்கப்படும் கேள்விகளைப் பற்றிப் பார்ப்போம்.
போட்டியாளரின் பகுத்தாராயும் திறன், தர்க்கத் திறன் (Logical skill), ஏதாவது ஒரு வரையறையின் அடிப்படையில் கொடுக்கப்பட்டிருக்கும் படங்கள், குறியீடுகள், எண்களில் இருந்து தரவுகளையும், தகவல்களையும் புரிந்துகொள்ளும் திறன் (Ability to interpret) போன்ற திறமைகளை ஆராயும் வகையில் இந்தப் பகுதியில் வினாக்கள் கேட்கப்படுகின்றன.
ஒழுங்குபடுத்துதல் (Arrangement), தொடர் முடிவை கண்டுபிடித்தல் (Sequential Output Tracing), முடிவுக்கு வருதல் (syllogisms), தகவல் ஆய்வு (Data), சிக்கலான ஆராய்வு (Critical Reasoning), மாறுபட்டதை கண்டறிதல் (Odd-man out), காட்சி ஆராய்வு (Visual Reasoning) என ரீசனிங் பகுதியில் பல்வேறு பிரிவுகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். 

கேள்விகளின் தன்மை
 
ஒழுங்குபடுத்துதல் பிரிவில் 12 முதல் 15 கேள்விகள் வரை கேட்கப்படுகின்றன. விடையளிக்க சற்று அதிக நேரம் எடுக்கும் பகுதி இது. இருப்பினும், கொடுக்கப்பட்டிருக்கும் படங்கள், அட்டவணைகள், தரவுகளை புரிந்துகொண்டால் விரைவாக விடையளித்து முழு மதிப்பெண்ணும் பெற்றுவிட முடியும். இப்பகுதியின் கேள்விகளுக்கு விடையளிக்க, விஷயங்களைப் புரிந்துகொள்ளும் திறன் இருந்தாலே போதும்.
தொடர்பு முடிவு கண்டுபிடிக்கும் பகுதியில் 4 முதல் 6 கேள்விகள் வரை கேட்கிறார்கள். எண்கள் அல்லது எழுத்துக்களைக் கொண்டு கேள்விகளை உருவாக்கியிருப்பார்கள்.
அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கக்கூடியதாகவும் இந்தப்பகுதி அமையும். சில நேரம் ஒரு கேள்விக்குக் கூட விடையளிக்க முடியாததாகவும் இப்பகுதியில் வினாக்கள் அமைந்துவிடுவது உண்டு.
கேள்விகளின் தன்மை பிடிபட்டுவிட்டால் பிறகு விடையளிப்பது எளிது. இதற்கு ஒருமுகப்படுத்தும்திறன் மிகவும் முக்கியமானது. ஒருசிறு தவறுகூட ஒட்டுமொத்தமாக அனைத்து கேள்விகளுக்கும் சரியாக விடையளிக்க முடியாமல் செய்துவிடும். 

விதிமுறை
 
முடிவுக்கு வருதல் பகுதியில் (syllogisms) 6 முதல் 8 கேள்விகள் இடம்பெறுகின்றன. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் ஒன்றுக்கொன்று இருக்கும் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. வாக்கியங்களைப் புரிந்துகொள்வதுடன் கேள்விகளின் தன்மையை நன்கு புரிந்துகொண்டு அதற்கேற்ப விடையளிக்க வேண்டியது அவசியம்.
ஏதாவது ஒரு விதிமுறை அடிப்படையில் பதில் அளிக்கக்கூடிய வகையில் வினாக்கள் அமைந்திருக்கும். அந்த விதிமுறை தெரியாமல் இப்பகுதி கேள்விகளுக்கு விடையளிக்க முடியாது.
தரவு (Data Sufficiency) பகுதியில் 4 முதல் 6 வினாக்கள் வரை கேள்விகள் இடம்பெறும். மேற்கண்ட பகுதியைப் போன்றே இதிலும் வாக்கியங்கள் கொடுக்கப்பட்டு கேள்விகள் கேட்கப்படும்.
ஆனால், கேள்விகள் கணிதம் சார்ந்து இல்லாமல் தர்க்கம் (Logic) தொடர்பானவையாக அமைந்திருக்கும். கேள்வியில் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கங்களை நன்கு புரிந்துகொண்டுவிட்டாலே பாதி விடையளித்தது போல்தான். 

கேள்வியின் அடிப்படை 
 
விஷூவல் ரீசனிங் பிரிவில் 5 முதல் 10 வினாக்கள் வரை கேட்கிறார்கள். ஐந்தாறு படங்களைக் கொடுத்து அந்த தொடரின் தொடர்ச்சி எது, அல்லது அந்த தொடர்ச்சிக்குப் பொருந்தாதது எது என்ற வகையிலான கேள்விகள் இடம்பெறுகின்றன. கூர்ந்து உற்றுநோக்கும் திறன் இருந்தால் எளிதாக விடையளித்துவிடலாம்.
எண்களின் கூட்டல், கழித்தல் கொண்ட படங்கள், கடிகார முள் திசை பக்கம் நோக்கி அல்லது எதிர்திசை நோக்கிய நகர்தல், ஏதாவது கூடுதல் அடையாளம் இருத்தல் அல்லது ஏதாவது ஒன்று விடுபடுதல் என்பன போன்று படங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். படங்களின் அடிப்படை தன்மை பிடிபட்டுவிட்டால் விரைவாக விடையளித்துவிடலாம். அடிப்படைத்தன்மை புரியாவிட்டால் உடனடியாக அடுத்த கேள்விக்கு சென்றுவிடுவதுதான் புத்திசாலித்தனம். 

ஆய்வுத்திறன்
 
ரீசனிங் பகுதியில் கடினமான பிரிவாக கருதப்படுவது ‘கிரிட்டிக்கல் ரீசனிங்’ பிரிவுதான். பகுத்தாராயும் திறமை அதிகளவில் சோதிக்கப்படும் இப்பகுதியில் 6 முதல் 8 வினாக்கள் இடம்பெறுகின்றன. கேள்வியில் என்ன கேட்டிருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டு தர்க்கம் மற்றும் ஆங்கில அறிவைப் பயன்படுத்தி விடையளிக்க வேண்டியதிருக்கும்.
அனுமானங்கள், காரணங்கள்-விளைவுகள், செயல்பாட்டு போக்கு, வாதங்களை உறுதிபடுத்தும் மற்றும் பலவீனப்படுத்தும் தன்மை, கண்டிப்பாக சரியா? அல்லது தவறா?, சரியாக இருக்கலாமா? அல்லது தவறாக இருக்கலாமா? என குழப்பும் வகையில் வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும்.
வெறுமனே தகவல்களை தெரிந்து வைத்திருப்பதுடன் ஆராய்ந்து பார்க்கும் திறனையும் வளர்த்துக்கொண்டால் ரீசனிங் பகுதியில் அதிக மதிப்பெண்கள் எடுப்பதில் சிரமம் இருக்காது. வினாக்களுக்கு விடையளித்துப் பயிற்சி பெறும்போது, அவற்றின் அடிப்படை விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அது தேர்வின்போது கைகொடுக்கும்.

 

நெட் தேர்வில் தேர்ச்சி பெற டிப்ஸ்...

நெட் தேர்வில் தேர்ச்சி பெற டிப்ஸ்...

 

 பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் நெட் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான சில எளிய வழிமுறைகள்.

* நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் ஆசிரியராவதற்கான தகுதி பெற முடியும். அத்துடன், ஆராய்ச்சிப் படிப்புகளில் சேர்ந்து படிக்க உதவித் தொகையும் பெற முடியும்.

* நெட் தேர்வில் முதுநிலைப் படிப்புகளில் உள்ள ஒவ்வொரு பாடப்பிரிவுகளிலிருந்தும் வினாக்கள் கேட்கப்படுகின்றன. ஆகையால், நீங்கள் உங்களது முதுநிலைப் படிப்பிற்கான புத்தகங்களை தேசிய தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படையில் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் முதுநிலை படிப்பைப் படிக்கும்போது வகுப்பறையில் குறிப்புகளை எழுதி வைத்த நோட்டுகளையும் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய நெட்தேர்வுக்கான பாடத்திட்டத்தை முழுமையாகக் கொண்டிருக்கும் புத்தகங்களை வாங்க வேண்டும். ஆயிரம் ரூபாய் செலவு செய்தால் போதும், தேர்வுக்குப் போதுமான நல்ல புத்தகங்களை வாங்கி விடலாம்.

* தற்போது, கடந்த பத்து ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்வித்தாள்கள் யு.ஜி.சி. இணையதளத்தில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக இத்தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகளும் வழங்கப்படுகின்றன. இவற்றை டவுன்லோடு செய்து, பிரிண்ட் அவுட் எடுத்து பயிற்சி பெறலாம்.

* தேர்வு பாடத்திட்டத்திற்கு தகுந்த முறையில் சேகரித்த பாடப்புத்தகங்களையும், குறிப்புகளையும் நன்கு ஆழமான முறையில் தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணத்திற்கு யாரால் கண்டறியப்பட்டது, எந்த ஆண்டு கண்டறியப்பட்டது போன்ற விவரங்கள் என அனைத்தையும் ஆழமாகப் படித்து, குறிப்பேட்டில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதுபோல் ஒவ்வொரு யூனிட்டிற்கும் தயார் செய்துகொள்ள வேண்டும்.

* ஒரே பாடத்தில் தேர்வுக்கு தயாராகுபவர்கள், குழுவாகச் சேர்ந்து பயிற்சி மேற்கொள்ளும்போது எளிதில் விஷயங்கள் மனதில் பதியும். இதன் மூலம் பல விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் போது காலம் மிச்சமாகும். மேலும், ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களின் ஆலோசனைகளையும் அவர்களிடம் உள்ள குறிப்புகளையும் பெற்றுக்கொள்வது நல்லது.

* முன்னணி பாடப் புத்தகங்களை வெளியிடும் நிறுவனங்கள் நெட் தேர்வு மாதிரி வினா விடை புத்தகங்களை வெளியிடுகின்றன. இவற்றில் தரமானதைத் தேர்ந்தெடுத்து வாங்கி, அதில் வெளியிட்டு உள்ள கேள்விகளுக்கு சரியான பதில்களை எழுதிப் பார்த்துப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பயிற்சி செய்யும் போது பலரும் ஒவ்வொரு கேள்விக்கும் வழங்கப்பட்டிருக்கும் நான்கு விடைகளில் எது சரியானது என்பதைத் தான் பார்ப்பார்கள். அப்படிப் பார்த்தால் தேர்வின்போது தடுமாற வேண்டி இருக்கும். இதற்கு மாற்றாக ஒவ்வொரு கேள்விக்கும் சரியான விடை எது என்பதை படித்து பார்த்து முடிவெடுக்க வேண்டும். இதுபோல் பயிற்சி செய்யும்போது தேர்வில் விடைகளின் வரிசையினை மாற்றிக்கொடுத்து இருந்தால் எளிதாக தடுமாறாமல் விடையளிக்க முடியும்.

* ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட கேள்வித்தாள்களைக் கொண்டு மாதிரித் தேர்வு எழுதிப் பார்க்க வேண்டும். அதன் பின்பு அதற்கான விடைகளோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும். பழைய கேள்வித்தாள்களில் இருந்து 10 முதல் 15 சதவித வினாக்கள் புதிய தேர்வுகளில் இடம் பிடிக்கின்றன. இந்தப் பயிற்சி உங்களின் மதிப்பெண்ணைக் கூட்டும். அத்துடன், உங்களது நேர மேலாண்மைக்கு உதவும். அத்துடன், தொடர் பயிற்சி மேற்கொள்ளும்போது உங்களுக்குள் தன்னம்பிக்கை வளரும். தேர்வில் வெற்றி பெறுவதற்கான நம்பிக்கை கூடும்.

* யூஜிசி நெட் தேர்வானது மூன்று தாள்களைக் கொண்டது. முதல் தாள் தேர்வு அனைவருக்கும் பொதுவானது. இந்தத் தாளில் Research aptitude, Teaching aptitude போன்ற பிரிவுகளில் இருந்து கேள்விகளைக் கேட்கிறார்கள். வகுப்பறையில் ஆசிரியர் எப்படி மாணவர்களைக் கையாள வேண்டும் என்ற வகையிலும் நிறைய கேள்விகள் இருக்கும்.

அத்துடன், இந்தியாவில் உயர் கல்வி குறித்த விஷயங்கள், பல்கலைக்கழக மானியக்குழு குறித்த விஷயங்களும் கேட்கப்படுகின்றன. முதல் தாளில் சுற்றுச்சூழல் கல்வி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கேள்விகளும் இடம் பெறுகின்றன. இந்தப் பிரிவுகள் குறித்து அடிப்படை அறிவினை வளர்த்துக் கொள்வது அவசியம். முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களைத்தான் இரண்டாவது மற்றும் மூன்றாவது தாளில் எவ்வளவு மதிப்பெண் பெற்று இருக்கிறார்கள் என்று பார்த்து முடிவை வெளியிடுகிறார்கள்.

* இரண்டாவது மற்றும் மூன்றாவது தாளில் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியே கேள்விகளை வடிவமைத்து இருப்பார்கள். மூன்றாவது தாளில் ஐந்தில் இருந்து பத்து கேள்விகள் தர்க்க வாதம் சார்ந்தவையாக இருக்கும். இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்க ஆங்கில அறிவு அவசியம். பழைய கேள்வித்தாள்களில் தர்க்க வாதக் கேள்விகளை எப்படிக் கேட்டு இருக்கிறார்கள், அதற்கான விடைகள் எவை என்பதை பார்த்துத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இதுபோல் வெவ்வேறு கேள்வித்தாள்களில் இருந்து தர்க்க வாத கேள்விகளுக்குப் பதிலளிக்கும் முறையினை பயிற்சி எடுத்துக்கொண்டால் இப்பகுதியில் உள்ள கேள்விகளுக்கு சரியான விடையளித்து விட முடியும்.

இத்தேர்வு எழுதுபவர்களுக்கு நேர மேலாண்மை முக்கியம். தேர்வு நடைபெறும் இடத்துக்கு உரிய நேரத்தில் செல்லுங்கள். தேர்வில் கொடுக்கப்பட்டுள்ள நேரத்திற்குள் அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்கப் பாருங்கள். தேர்வுக்கு முன்னதாக நல்ல பயிற்சி தேவை. இத்தேர்வுக்காக நேரம் ஒதுக்கி நன்கு படியுங்கள். தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள். வெற்றி நிச்சயம்.